திருவண்ணாமலை மாவட்ட தொல்லியல் சுவடுகள்
1.
தொன்மைச் சுவடுகள்
உலகில் மனித இனம் நாடோடியாக வாழத்தொடங்கி, இன்று அதிநவீன கருவிகளுடன் பலகோடி
கி.மீ. தூரத்தில் அண்டவெளியில் சுழலுகின்ற
பல்வேறு கோள்களையும் கண்ணுக்கு புலப்படாத பல்வேறு கதிர்வீச்சுகளையும் கண்டுபிடிக்கும்
தொழில்நுட்பம் வாய்க்கப்பெற்றுள்ளான். இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைய பல இலட்சம் ஆண்டுகள்
ஆனாலும் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து மிகவேக வளர்ச்சி அடைந்து தற்போதை
அதிநவீன வாழ்க்கை முறைக்கு வந்துள்ளான். இம்மனித வளர்ச்சியின் சான்றாகத் திகழும் தொல்லியல்
சுவடுகளைப்பற்றியும் அது திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவியிருந்ததைப்பற்றியும் காணலாம்.
மனித இனம் வாழ்ந்த
தடங்களைக் கொண்டு வரலாற்றை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கின்றனர். 1. வரலாற்றுக்கு
முற்பட்ட காலம், 2 வரலாற்றுககாலம், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப் பற்றிய எழுத்து
வடிவ சான்றுகள் கிடைக்காது, வரலாற்றுக்காலத்தில் எழுத்துவடிவ சான்றுகள் உண்டு, வரலாற்றுக்கு
முற்பட்ட காலத்தை கற்காலம் என்றும் அதற்குள்ளும் பழைய கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம்
அல்லது உலோக காலம் என்றும் அதைப் பிரிப்பர்.
பழைய
கற்காலம் (கி.மு.2 லட்சம் ஆண்டுகள் முதல் கி.மு.10000 வரை)
பழைய கற்கால
மக்கள் வாழ்ந்த பகுதிகள் இந்தியாவில் பல இடங்களில் உள்ளன. தமிழ்நாட்டில் வடபகுதியில்
திருவள்ளுர் மற்றும் அதைத்சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது. திருவள்ளூர்
அருகே உள்ள குடியம் குகையில் சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் வாழ்ந்த சுவடுகளும்
அவர்கள் பயன்படுத்திய கருவிகளும் கிடைத்துள்ளள. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெம்பாக்கம்
வட்டத்தில் உள்ள பில்லாந்தாங்கல் என்ற இடத்தில்
இடைப்பழங்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளான வெட்டுக்கருவி, கைக்கோடரிகள், உளி,
சுரண்டிகள், சில்லுக்கருவிகளும் கடைப்பழங்காலத்தைச் சேர்ந்த சுண்டிகள், துளைப்பாண்கள்,
கூர்முனைக்கருவிகளும், நுண்கற்காலத்தைச்சேர்ந்த அலகு கத்திகள்,சுரண்டிகள்,முனைகள்,
துளைப்பான்கள் கிடைத்துள்ளன. தற்போதுவரை திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்கற்காலக்கருவிகள்
கிடைக்கும் இடமாக பில்லாந்தாங்கல் கிராமம் அமைந்துள்ளது. இவ்விடம் பில்லாந்தாங்கல்
கிராமத்தில் பாலாற்றிலிருந்து தூசி – மாமண்டூர் ஏரி செல்லும் கால்வாயின் இருபுறத்திலும்
இதுபோன்ற கற்கருவிகள் காணப்படுகின்றன.
இவைதவிர தண்டராம்பட்டு
அருகே உள்ள தொண்டமானூரில் பாறையில் பழங்கால மக்கள் உருவாக்கிய பாறைக்கீறல்கள் உள்ளன.
இதன் காலம் இதுவரை வரையறை செய்யவில்லை என்றாலும் இதன் அமைப்பை நோக்கும் போது இது பழைய
கற்கால மக்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புதியகற்காலம்
( கி.மு.10000 முதல் கி.மு. 4000 வரை)
புதிய கற்கால
மக்கள் வாழ்ந்த பகுதி திருவள்ளூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காணப்படுகின்றன.
வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் அருகில் பையம்பள்ளி என்ற இடத்திலும், திருவண்ணாமலை
மாவட்டத்தில் சவ்வாது மலையில் பல இடங்களிலும் குறிப்பாக கீழையூர், பாதிரி, நாச்சாமலை
ஆகிய இடங்களிலும் காணப்படுகின்றன. புதிய கற்கால மக்கள் தங்கள் தேவைக்காக கற்கருவிகளை
உருவாக்க பாறைகளை தேய்த்து கூர்மைப்படுத்திய இடங்கள் உள்ளன. இதன் காலம் சுமார்
5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். .இக்கால மக்கள் நாடோடிகளாக இல்லாமல் ஒரிடத்தில்
சேர்ந்து வாழ்ந்தனர். இவர்கள் கூரை வீடுகளிலும்
விலங்கு தோல்களால் ஆன ஆடைகளையும் அணிந்திருந்தனர். இவர்கள் நாய், மாடு போன்ற மிருகங்களை
வளர்த்துவந்தனர்.
பெருங்கற்காலம்
அல்லது இரும்புக்காலம். (கி.மு.2000 முதல்
கி.பி. 300வரை)
பெருங்கற்காலம் என்பது இறந்தவர்களை புதைக்கும் இடத்தைச் சுற்றி
பெரிய கற்கலால் ஆன பாறைகளை வட்டமாக அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். பெரிய கற்களை
பயன்படுத்திய காலம் என்பதால் இது பெருங்கற்காலம் என்று அழைக்கப்பட்டது.

திருவண்ணாமலை
மாவட்டத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இதில்
தொல்லியல் துறையினர் ஒரு சில இடங்களில் மட்டுமே ஆய்வுகள் செய்துள்ளனர். பெருங்கற்கால
சின்னங்கள் செங்கம், சவ்வாது மலை, தண்டராம்பட்டு,
திருவண்ணாமலை வட்டங்களில் அதிக அளவும் போளூர், வெம்பாக்கம் வட்டங்களில் ஒரு சில இடங்களிலும்
அமைந்துள்ளன. இப்பெருங்கால சின்னங்களின் முக்கியத்துவம் தெரியாமல் காலப்போக்கில் அழிந்து
வருகின்றன.
பெருங்கற்காலச்
சின்னங்களை அவற்றின் அமைப்பைக் கொண்டு வேறுபடுத்தலாம். அவை. 1. கல்வட்டம். 2. கல்பதுக்கை,
4.கல்திட்டை, 4. கற்குவை, 5. குத்துக்கல்.
கல்வட்டம்
(Cairn circle)
கல்வட்டம் என்பது மண்ணில் ஆழமான குழியைத் தோண்டி அந்தக் குழியில்
நான்கு பக்கங்களிலும் நான்கு பலகைக்கற்களைக்கொண்டு செங்குத்தாக நிறுத்தி அதன் தரையில் ஒரு பலகைக்கல்லைப் பரப்பியும் இவற்றிற்கு
மேலே ஒரு பலகைக்கல்லை வைத்து மூடி கல்லறை உருவாக்கப்பட்டது. கிழக்குப்பக்கம் உள்ள கல்லறையில்
ஒரு துளை ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். கல்லறையின் உட்பகுதியில் இறந்தவர்களின் எலும்புகளையும்
, படையல் பொருட்களையும் வைத்து மூடிவிடுவர். கல்லில் துளை இடுவது என்பது இறந்தவர் ஆவி உருவில் வெளிவருவார் என்ற நம்பிக்கை இருந்தது. இது
போன்ற கல்வட்டங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன. அவை
வீரணம்
தண்டராம்பட்டு அடுத்த வீரணம் கிராமத்தில் பொன்ராயர் கோயிலுக்கு
அருகில் உள்ள காட்டில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. 2011 ஆண்டு
அகழாய்வு செய்யும் போது ஒரு பக்கம் நீள் செவ்வக கற்கலாரும் ஒன்றும் கிடைமட்டமாக நிறுத்தப்பட்டுள்ளது
இது வேறு எங்கும் காணாத சிறப்பாகும். ஆதிச்சநல்லூருக்கு அடுத்தபடியாக பெரிய ஈமக்காடாக
அமைந்துள்ளது என்றும் இதனை முழுமையாக ஆய்வு செய்யதால் தமிழகத்தின் பெருங்கற்காலப்பண்பாடு
பற்றிய மேலும் பல தகவல்கள் வரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். . வீரணம்
கிராமத்தில் பெருங்கற்காலப் நினைவுச்சின்னங்களான கல்வட்டம், கல்பதுக்கை, கல்திட்டை,
நடுகல், குத்துக்கல் என அனைத்து வகைகளும் ஒரே இடத்தில் கிடைப்பது அரிதான ஒன்றாகும்.
தா.மோட்டுர்.
தானிப்பாடி
அருகே மோட்டூரில் சுமார் 60 கல்வட்டங்கள் இருந்தன. இதில் நிறைய அழிந்து விட்டன. தற்போது
10 க்கும் குறைவான கல்வட்டங்களே காணப்படுகின்றன. இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை இவ்விடத்தில்
1978 ஆண்டு அகழாய்வு செய்துள்ளனர். இந்த கல்வட்டங்கள் ஆய்வு செய்த போது இரும்புக்கால
மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், இரும்புக்கத்தி போன்றவை கிடைத்துள்ளன. தா. மோட்டுர்
கல்வட்டத்தில் அமைந்துள்ள தாய்தெய்வக்கல் தமிழகத்தின் முதல் வழிபாட்டு சிலை என்றும் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதன்காலம்
கி.மு. 1000 அதாவது 3000 ஆண்டுகள் பழமையானது.
இதுபோன்ற கல்வட்டங்கள்,
தானகவுண்டன்புதூர், தொரப்பாடி, பெரியகோளாப்படி, சாத்தனூர், வெறையூர் உள்ளிட்ட பல இடங்களில்
உள்ளன.
கல்பதுக்கை
(Dolmenoid Cist)
கல்பதுக்கை தரைமட்டத்திற்கு கீழே அமைக்கப்பட்டதாகும், கல்பதுக்கைக்குப்
பட்டயாகச் செதுக்கப்பட்ட லேட்டரைட் என்ற கற்களே பயன்படுத்தப்பட்டன. எனவே கல்பதுக்கைகள்
லேட்டரைட் பாறைகள் கிடைத்த இடங்களில் அமைக்கப்பட்டன. கல்திட்டைகளைப்போலவே இதிலும் இடப்படும் ஈமப்பொருட்கள்
ஒரே விதமானதாகும். இறந்தவுடன் பிணத்தைப் பலநாட்கள் திறந்த வெளியில் போடப்படும் பின்னர்
எஞசியுள்ள எலும்புத்துண்டுகளைப் பொறுக்கி அணிகலன்கள் மட்கலங்கள், இரும்பு ஆயுதங்கள்
ஆகியனவும் இக்குழிகளில் இடப்படுகின்றன. கல்திட்டையிலும் கல்பதுக்கையிலும் நான்கு பக்கங்களில்
ஏதாவது ஒரு பக்கத்தில் துளை (Port hole ) ஒன்று இடப்பட்டுள்ளது.
கல்திட்டை(SlabCist)
கல்திட்டை எனப்படும் ஈமச்சின்னம் பொதுவாக பூமியின் மேல் நான்கு
பெரிய பலகைக்கல்லை பக்கங்களில் நிறுத்தி அதன் மேல் ஒரு பலகைக்கல்லை மூடுகல்லாக (
Cap stone) வைத்து கல்லறை உருவாக்கப்படுவதாகும். கிழக்குப்பக்க கல்லில் ஒரு பெரிய துளை
ஒன்றும் போடப்பட்டிருக்கும். இது போன்ற அமைப்பு சவ்வாதுமலையில் கீழ்சேப்பிளி என்ற கிராமத்தில்
நிறைய காணப்படுகின்றன. இவற்றின் அமைப்பையொட்டி 3 வகைகளாக பிரிப்பர்.
முதல்வகை கல்திட்டை சதுரம், செவ்வகம் வடிவில் கற்களை ப வடிவில்
மூன்று பக்கமும் நிறுத்தி அதன் மேல் மூடுகல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். கிழக்கு பக்கம்
மூடப்படாமல் விடப்பட்டிருக்கும். இச்சின்னங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து 5 அல்லது 6
சின்னங்களாக சேர்ந்து இருக்கும். இரண்டாம் வகை ஈமச்சின்னங்களில் 3 பக்கமும் ப வடிவில்
பலகைக்கல்லை அமைத்து கற்கள் சாயாமல் இக்க பக்கவாட்டில் சிறிய கற்களை நிறுத்திவைப்பர்.
கிழக்குப்பக்கம் மூடப்படாமல் கல்லறை நுழைவாயில் போல இருக்கும். இவை தனித்தனியே அமைந்திருக்கும்.
மூன்றாம் வகை நான்கு புறமும் பெரிய பலகைக்கல்லை வைத்து மேல்பகுதியில் மூடுகல்லை வைத்து
மூடிவிடுவர், கிழக்குப்பக்கம் கல்லில் மட்டும் வட்டமாக ஒரு துளை அமைந்திருக்கும்.
இவ்வகையான கல்திட்டைகள்
ஒரே இடத்தில் சுமார் 300 மேற்பட்ட அளவில் இருந்தது. ஆனால் தற்போது இதன் எண்ணிக்கை குறைந்து
வருகிறது. இதன் அமைப்பை நோக்கும் போது ஒவ்வொரு வகையான ஈமச்சின்னங்களும் அங்கு வசித்த
ஒவ்வொரு இனக்குழுவினருடையது என்றும் இதன் மூலம் சவ்வாது மலையில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு
முன்பே பல்வேறு வகையான இன மக்கள் குழுவாக வாழ்ந்து வந்துள்ளனர் எனத் தெரியவருகிறது.
கற்குவை(Cairns)
நிலத்தில் புதைத்த இடத்தில் மண்ணைக் குவிப்பதற்குப் பதிலாக
சல்லிக் கற்களைக் குவிக்கும் வழக்கமும் இருந்தது. சவ்வாதுமலையில் கீழ்சேப்பிளி கிரமத்தில்
அமைந்துள்ள பல்வேறு ஈமச்சின்னங்களில் கற்பலகைக்கும் மேலும் சிறு சிறு கற்களை கற்குவியலாக
அமைத்துள்ளனர். இவ்வகையான ஈமச்சின்னங்கள் கற்குவை எனப்படும்.
சவ்வாதுமலை,
குத்துக்கல்.(Menher)
ஈமக்குழிகளுக்கு மேல் உயரமான கல்லை செங்குத்ததாக நிறுத்துவது
நடுகல் அல்லது குத்துக்கல் எனப்பட்டது.
ஈமப்பேழை
இது தொட்டிபோன்ற
அமைப்பு உடைய பேழை (Sarcophagus) என்பது மண்ணால் செய்து சுடப்ட்டிருக்கும், பேழையில்
அடிப்பகுதியில் இரண்டு வரிசையில் நான்கு கால்கள் முதல் 24 கால்கள் வரை உள்ளன. இப்பேழையை
மூடுவதற்கு மேல் மூடி ஒன்று அலங்கார வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றனது. பேழை மணல்
கலந்த மண்ணாமல் செய்யப்பட்டிருக்கும் அதன் ஓடுகள் சொரசொரப்பாகவும் தடித்தும் காணப்படுகின்றன.
பேழையின் உட்பகுதியில் எலும்பு மற்றும் படையல் பொருட்கள் வைத்த பின்னர் மூடி கொண்டு
மூடப்பட்டிருக்கும். சில பேழைகள் ஆடு, மாடு அமைப்புகளிலும் இருக்கும். இவை கல்வட்டம்,
கற்குவை,கற்பதுக்கை போன்ற பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் உட்பகுதியில் காணப்படுகின்றன.
பண்பாடு
தென்னிந்தியாவில்
காணப்படும் பெருங்கற்காற நினைவுச்சின்னங்கள் போன்றே மத்தியதரைக்கடல் பகுதியிலும் ஐரோப்பாவின்
பலஇடங்களிலும் கிடைக்கின்றன. இது பண்டைய தமிழகத்திற்கும் ஐரோப்பாவிற்கும் உள்ள தொடர்பை
உறுதிப்படுத்துகின்றன. மேலும் தமிழகத்தில் ஆய்வு செய்த சில பெருங்கற்கால சின்னங்களில்
ரோமன் நாணயங்கள் கிடைக்கின்றன.
பெருங்கற்கால
மக்கள் வேளாண்மை நன்கு தெரிந்து வைத்திருந்தனர். ஈமக்குழிகளில் கிடைக்கும் பானைகளில்
நெல் அல்லது அதன் உமி பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன. சில இடங்களில் பருத்தி போன்ற
துணிகளும் கிடைத்துள்ளன. எனவே, இக்கால மக்களுக்கு நெல், பருத்தி போன்றவற்றை பயிரிட்டார்கள்
எனத் தெரியவருகிறது.
ஈமச்சின்னங்கள்
ஒரே இடத்தில் அதிக அளவு காணப்படுவதால் அக்கால மக்கள் ஒரே இடத்தில் குழுவாக வாழ்ந்து
வந்துள்ளனர் என்றும் ஈமச்சின்னங்களில் பல்வேறு வகைகளில் இருப்பதும் ஒரே இடத்தில் பெரியதும்
சிறியதுமாக அமைந்திருப்பதும் ஒரே இனக்குழுவில் தலைவருக்கும் மற்றவர்களுக்கு உள்ள வேற்றுமை
புலப்படுகிறது.
இக்கால மக்கள் இரும்பின் பயனை நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.
பெரும்பாலான குழிகளில் இருப்புக்கத்தி, இரும்பாலான பிற பொருட்கள் கிடைக்கின்றன. இவர்களுக்கு
இரும்பை உருக்கி ஆயுதங்கள் செய்யும் தொழில் நுட்பங்கள் தெரிந்துவைத்துள்ளனர். திருவண்ணாமலை
மாவட்டம் சாத்தனூர் அருகே உள்ள கொழுந்தம்பட்டு, வீரணம், திருவண்ணாமலை அருகே உள்ள பாலியப்பட்டு
போன்ற இடங்களில் இரும்பு உருக்காலைகள் செயல்பட்டதற்கான தடயங்கள் கிடைக்கின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் உள்ள இந்த பெருங்கற்கால
ஈமச்சின்னங்கள் பற்றி உள்ளூர் மக்களுக்கோ அல்லது படித்தவக்களுக்கோ இதைப்பற்றிய புரிதல்
இல்லாமல் இதை தொடர்ந்து அழித்து வருகிறார்கள். இப்பெருங்கற்கால சின்னங்கள் ஆய்வுக்கு
உட்படுத்தும் போது பல்வேறு வரலாற்றுச்சிறப்புமிக்க தகவல்கள் வெளிவரலாம். இதில் சுமார்
2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை நிலை, பழக்க வழக்கங்கள், பண்பாட்டு
கூறுகள் போன்றவை தெரியவரும்.


Comments
Post a Comment