திருவண்ணாமலை மாவட்ட அகழாய்வுகள்
திருவண்ணாமலை மாவட்ட அகழாய்வுகள்
திருவண்ணாமலை மாவட்டம், புதிய கற்காலத்திலிருந்து சிறந்து விளங்கி வருகிறது.
குறிப்பாக
இம் மாவட்டம் முழுவதும் பெருங்கற்காலச் சின்னங்கள் பரவலாகக் காணப்படுவதால், பெருங்கற்காலப் பண்பாடும், அதனோடு இணைந்த சங்ககாலப் பண்பாடும், இங்கு செழிப்புற்றிருந்தது என அறிய முடிகிறது.
இம்மாவட்டத்தின் செங்கம் பகுதியை நன்னன் என்ற மன்னன் ஆண்டு வந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறுகின்றன. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்க மாவட்டத்தில் மோட்டூர், ஆண்டிப்பட்டி ( செங்கம் வட்டம் ) மற்றும்
படவேடு ( போளுர் வட்டம்) ஆகிய இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பல அரிய வரலாற்றுச் செய்திகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
அவை குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
1. மோட்டுர்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் திருவண்ணாமலையிலிருந்து தானிப்பாடி செல்லும் சாலையில் 30 கி.மீ தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது.
மலையடிவாரத்தில் அமைந்துள்ள
இவ்வூரில் பெருங்கற்காலச் சின்னங்கள்
பெருமளவில் உள்ளன.
அகழாய்வுகள்
மோட்டுரின் மேற்கிலுள்ள மலையடிவாரப் பகுதியில் 60 க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதை முனைவர் பி. நரசிம்மய்யா அவர்கள், கள ஆய்வின் பொழுது கண்டுபிடித்தார். இக்கல்வட்டங்கள்
3.5 மீ லிருந்து 12 மீ வரை விட்டங்களை உடையவை.
வேளூர் மலை எனக் கூறப்படும் இம்மலையின் கிழக்குப் பகுதி முழுவதும் ஏறக்குறைய ஏழு ஹெக்டர்
பரப்பளவில் இச் சின்னங்கள் காணப்படுகின்றன.
இவையாவும் உள்ளுர் மக்களால் பல்வேறு காலகட்டத்தில் சிதைக்கப்பட்டுள்ளன.
இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் திரு. எல்.கே.சீனிவாசன் தலைமையில் 1978-79 ஆம் ஆண்டுகளில் மோட்டூரில் அகழாய்வுகள் மேற்கொண்டனர்.
பெருங்கற்காலச் சின்னங்களும் நான்கில் அகழாய்வுகள் மேற்கொண்டதில் ஒரு குழியில் எவ்விதச் சிதைபாடுகளும் காணப்படவில்லை.
மற்ற மூன்று குழிகள்
சிதைந்து காணப்பட்டன.
அகழாய்வு ஈமக்குழிகள்
மூன்றும் 75 செ.மீ ஆழத்திற்கு தோண்டப்பட்டன இவற்றில் கருங்கற் பலகைகளால் அமைக்கப்பட்ட கற்பதுக்கைகள் காணப்பட்டன.
இவையாவும் சிதைந்தே இருந்தன.
இவற்றின் அடியில் இயற்கையாக அமைந்த கருங்கற் பாறைகளைக் குடைந்து ஈமக்குழியாக ஏற்படுத்தி இப்பலகைகளை அமைத்துள்ளனர்.
நான்காவது ஈமக்குழி 1.66 செ.மீ அளவிற்குத் தோண்டப்பட்டது. கற்பலகைகள் சில 10 செ.மீ தடிப்பும் சில 18 செ.மீ
தடிப்பும் கொண்டிருந்தன.
இவை சுவஸ்திக வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
இதன் மேல், மூடி போன்ற தொப்பிக்கல் காணப்படவில்லை.
கற்பதுக்கைகளின் கிழக்குக் கற்பலகையில் இடுதுளை காணப்பட்டது.
தொல் பொருட்கள்
ஈமக் குழிகளில் பெருங்கற்காலப் பண்பாட்டினைச் சேர்ந்த மட்கலன்களும் ஈமப்பேழைகளும் காணப்பட்டன.
ஈமப் பேழைகள் கிழக்கு மேற்கு நோக்கியவாறு இக்குழிகளில் புதைக்கப்பட்டிருந்தன. இவை மூடிகளற்றுக் காணப்பட்டன.
இவற்றுடன் செம்பிலான கிண்ணம், மானின் உருவம், வளையல்கள் போன்றவையும் இரும்பிலான கத்திகள், உளி, குறுவாள், அரிய கல்மணிகள் ஆகியவையும் கிடைத்தன.
ஈமப் பேழைகள்
ஈமப் பேழைகளின் உள்ளே மனித எலும்புகள் இருந்தன.
நான்காவது ஈமச் சின்னத்தில் இரண்டு பெரிய ஈமப் பேழைகள் காணப்பட்டன.
இவற்றிற்கு மேற்கு பக்கத்தில் மேலும்
சிறிய ஈமப் பேழைகள் இருந்தன.
முதலாவது ஈமக்குழியில் 3 ஈமப் பேழைகளே இருந்தன.
பிற இரண்டு ஈமக்குழிகளிலும் ஓர் ஈமப்பேழை மட்டுமே காணப்பட்டன.
இவையாவும் கால்களுடன் இருந்தன.
ஈமப்பேழைகளை ஒட்டியவாறு பானைகள் புதைக்கப்பட்டிருந்தன.
சில மட்கலன்கள் ஈமப்பேழைகளின் மேற்புறத்திலும் காணப்பட்டன.
இம்
மட்கலன்கள் சிலவற்றிலும் பறவை எலும்பின் எச்சங்கள் சிறிய இரும்புக் கத்திகளும் இடப்பட்டிருந்தன.
இங்கே கண்டுபிடிக்கப்பட்ட மட்கலன்கள் யாவும் சக்கரத்தைக் கொண்டு வனையப்பட்வை.
வழவழப்பான கறுப்பு, கறுப்புசிவப்பு. மற்றும் சிவப்பு நில மட்கலன்கள் இங்கு கிடைத்தன.
இவற்றுள் சிவப்பு மட்கலன்களே மிகுந்து காணப்பட்டன.
காலுடன் கூடிய கூம்பு வடிவ மட்கலன்கள், நீண்ட கழுத்துடைய மட்கலன்கள், தாங்கிகள், கிண்ணங்கள், போன்றவை இவ்வகழாய்வில் கிடைத்த மட்கலன்களில் சிலவாகும்.
சில மட்கலன்களின் சிவப்பு வண்ணக் கோடுகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தாய்த்தெய்வக் கல்
இங்குள்ள கல்வட்டங்கள் ஒன்றில் மனித உருவமுடைய தாய்த் தெய்வக் கல் ஒன்றையும் நரசிம்மய்யா அவர்கள் கண்டுபிடித்தார்.
ஒரு பெரிய கற்பலகையை மனித உருவத்தை ஒத்த அமைப்பில் செதுக்கி கல்வட்டத்தின் ஒரு கல்லாகப் பயன்படுத்தி உள்ளனர்.
ஈமச்சின்னம் ஒன்றில்தான் தாய்த் தெய்வ உருவக்கல் காணப்பட்டது.
இது கல்வட்ட அமைப்பில் மூன்று கற்பலகைகளை வட்டமாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது.
தாய்த்தெய்வ வடிவமுடைய கல் தெற்கு நோக்கிய நிலையில் நடப்பட்டிருந்தது.
இது 3.25 மீ அகலமும் உயரமும் உடையது.
கழுத்தற்று தோள்பட்டைகளுடன் இடையில் குறுகி மனித உருவத்தைப் போன்று இக்கல் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இதேபோன்றே உருவக்கல் ஒன்றினைத் தமிழ்நாட்டு அரசு தொல்லியல் துறை விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் , உடையாநத்தம் என்னும் ஊரில் கண்டுபிடித்துள்ளது.
இதனை இவ்வூர் மக்கள் விசிறிக்கல் என அழைக்கின்றனர்.
இதனைப் போன்று உருவங்கள் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள மினோவ் கீரீட்டிலும், இத்தாலியில் உள்ள சாதீனியாவிலும் கிடைத்துள்ளன.
இவை கி.மு. 1700ஆம் ஆண்டைச் சேர்ந்தவை.
இந்தியாவில் இவற்றைப் போன்ற கல் உருவங்கள் கோதாவாரி ஆற்றுப் பகுதியிலும், சிறிய செப்பு உருவங்கள் கங்கையாற்றுப் பகுதியிலும், கிடைத்துள்ளன.
இவ்வுருவங்களை ஆய்வாளர்கள் வேத கால அதிதி என்னும் தாய்த் தெய்வத்துடன் ஒப்பிடுகின்றனர்.
இலட்சுமியின் ஸ்ரீ வத்சம் உருவத்தோடு இது பெரிதும் ஒத்துள்ளது.
இவ்வுருவங்கள்தான் தமிழகத்திலேயே இதுவரை கிடைத்துள்ள தெய்வ உருவங்களில் மிகவும் தொன்மையானவை ஆகும்.
இவை கி.மு. 1000தைச் சேர்ந்தவையாகும்.
2.
ஆண்டிப்பட்டி அகழாய்வு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், செங்கத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் ஆண்டிப்பட்டி எனும் சிற்றூர் அமைந்துள்ளது.
ஆண்டிப்பட்டி சிற்றூருக்கு அருகில் உள்ள செங்கம் என்ற ஊர் சங்க காலம் தொட்டே வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்ந்துள்ளது.
இவ்வ{ரை தலைநகராகக் கொண்டு ஆண்ட நன்னன் என்ற சிற்றரசனைப் பெருங்குன்றூர்; பெருங்கௌசிகனார் எனும் புலவர் மலைபடுகடாம் என்னும் நூலில் புகழ்ந்து பாடியுள்ளார்.
நன்னனைக் கூறும்போது. குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே (வரி 583) என்று மலைபடுகடாம் சிறப்பித்துக் கூறுகின்றது.
சங்க இலக்கியம் குறிக்கும் செங்கம் பகுதியில் 45 க்கும் மேற்பட்ட நடுகற்கள், தமிழ்நாட்டு அரசு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல்லவர் காலம் முதல் இப்பகுதியின் வரலாற்றுச் சிறப்பினை அறிந்து கொள்ள இந்த நடுகற்கள் பெரிதும் உதவுகின்றன.
இத்தகைய வராலாற்றுச் சிறப்புமிக்க செங்கம் அருகில் ஆண்டிப்பட்டி அமைந்துள்ளது. ஆண்டிப்பட்டி வழியாகச் செல்லும் செங்கம் கணவாய் சங்ககாலத் தமிழகத்தின் மேற்குப் பகுதியினைக் கிழக்குப் பகுதியுடன் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்கியுள்ளது.
எனவே, சங்க கால முக்கிய வணிக நகராக செங்கம் திகழ்ந்துள்ளது எனலாம்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டிப்பட்டியில் 1968-ஆம் ஆண்டு ஒரு புதையலில் 143 ஈயக்காசுகள் கிடைத்தன.
இப்புதையலில் எடுக்கப்பட்ட காசுகள் அனைத்தும் ஒரே வகையானவை.
இவை யாவும் வட்ட அச்சுக்களில் வார்க்கப்பட்ட காசுகள், இக்காசுகள் 2.32 செ.மீ விட்டமும் 8 கிராம் எடையும் கொண்டுள்ளன.
காசுகளின் முன்பக்கம் இணைகோடுகளில் இருபுறமும் இரண்டு வட்டங்கள் உள்ளன.
இதனை ஆய்வாளர்கள் அதின்னன் எதிரான் சேந்தன் எனப் படித்துள்ளனர்.
பின்புறத்தில் மூன்று முகடுகள் உள்ள இரண்டு குன்றுகள் உள்ளன.
இவை நதியைக் குறிக்கலாம்.
இக்காசின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு என குறிபபிடப்படுகினறது.
இக் காசில் குறிப்பிடப்பிட்டுள்ள சேந்தன் என்பவன் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனாக இருக்கலாம் இவை இம்மன்னால் வெளியிடப்பட்டிருக்கலாம்.
தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சங்க கால எழுத்துப் பொறிக்கப்பட்ட காசுகளில் இவை தனியிடம் பெறுபவையாகும்.
எனவே, வரலாற்றுச் சிறப்பு மிக்க காசுகள் கிடைத்த இவ்விடத்தில் அகழாய்வினை மேற்கொள்ள தமிழ் நாட்டு அரசு தொல்லியல் துறை முடிவு செய்தது.
துறையின் சிறப்பு ஆணையர் முனைவர் திரு. ஸ்ரீ.ஸ்ரீதர் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் திருவாளர்கள் ஆர். செல்வராஐ, மா. கலைவாணன், திருமதி. சீ. வசந்தி ஆகியோர் இங்கு 2004-2005 ஆம் ஆண்டில் அகழாய்வு மேற்கொண்டர்.
அவர்கள் வெளியிட்ட அகழாய்வு அறிக்கையிலிருந்து முக்கியச் செய்திகள் இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றன.
ஆண்டிப்பட்டியில் கல்லோடை என அழைக்கப்படும் பகுதியிலும், இந்திரா நகர் குடியிருப்பு என்ற பகுதியிலும் பெருங்கற்காலச் சின்னங்கள் காணப்படுகின்றன. நத்தமேடு சாம்பல்காடு என்று பகுதிகளில் சங்ககாலப் பானை ஓடுகள் கிடைக்கின்றன.
தமிழகத்தில் பெருங்கற்காலமும், சங்க காலமும் ஏறக்குறைய ஒதே கால கட்டடத்தை சார்ந்ததாகும். சங்க இலக்கியமும் குறிப்பும், சங்ககால காசுகள் கிடைத்திருப்பதும், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் நிறைந்த பகுதியும் ஒருசேர ஆண்டிப்பட்டியில் காணப்படுவது சிறப்பாகும்.
அகழ்வுக்குழிகள்
இங்கு மொத்தம் 12 அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டன.
இந்த அகழ்வுக் குழிகள் யாவும் ஆண்டிப்பட்டியிலிருந்து மண்ணாண்டிப்பட்டி செல்லும் வழியில் பரந்து விரிந்து காணப்படும் சாம்பல் மேட்டில் இவ்விடத்தின் பண்பாட்டுத் தொடர்ச்சியைத் தெளிவாக அறியும் வண்ணம் அகழந்து ஆய்வு செய்யப்பட்டன.
பொதுவாக இக்குழிகள் அனைத்திலும் ஒரு மீட்டர் அளவிற்கே மனிதனின் வாழ்விட மண்படிவு காணப்படுகிறது.
இக்குழிகள் அனைத்திலும் மொத்தம் இரண்டு பாள நிலைகளை மட்டும் காண முடிகிறது.
காலப்பகுப்பு
1.
கி.பி.
100 முதல் 600 வரை
மட்கல வகைகள் : 1. கருப்பு வெள்ளை கலன்கள், 2. பிராமி எழுத்து ஓடுகள்- 2, 3. குறியீடு
உள்ள ஓடுகள் , 4. ரௌலட்டட் ஓடுகள் , 5. பள்ளவரி கூரை ஓடுகள், 6. வடிதட்டுகள் ஆகிய பொருட்கள்
கிடைத்தன.
தொல்பொருட்கள்: -
1. யானை
அணிவகுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சுடுமண் தாங்கி, 2, சுடுமண் தக்களிகள்,
பெரிய சுடுமண் காளைமாடு, சுடுமண் காதணிகள், சுடுமண் விலங்கு பறவை உருவங்கள், சங்கு
வளையல்கள், இரும்பு உளிகள், மான்கொம்புகள், எலும்பு எலும்பு முனைகள், கல்மணிகள் ஆகியன.
2. கி.பி 600 முதல்
1200 வரை
மட்கல வகைகள்: 1. பளபளப்பு சிவப்பு கலன்கள்,, சொரசொரப்பு சிவப்புக் கலன்கள் குறியீடு உள்ள ஓடுகள் ரௌலட்டட் ஓடுகள்
தொல்பொருட்கள்
: சுடுமண் தாய்த்தெய்வ உருவங்கள், சுடுமண் மனித, விலங்கு, பறவை, இரும்பு ஆணிகள் உளிகள், சுடுமண் காதணிகள், சுடுமண் சதுரங்கக் காய்கள், சுடுமண் காதணிகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சிறிய தங்க மோதிரம், இலைவடிவத் தங்க தொங்கி, சுடுமண் மற்றும் கல்மணிகள், அரக்கு மணிகள்
முக்கியத் தொல்பொருட்கள்
சுடுமண் தாய்த்தெய்வ உருவங்கள்
ஆண்டிப்பட்டி அகழ்வில் மொத்தம் மூன்று சுடுமண் தாய்த்தெய்வ உருவங்கள் கிடைத்துள்ளன.
முதல் உருவம் சிறப்பானது.
இது தலையில் மகுடம் போன்ற அமைப்பைத் தாங்கியுள்ளது.
இதன் நீண்ட காதுகளும் அவற்றின் நுனியில் தொங்கும் நிலையில் குழைகளும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. கழுத்தில் மணியும் ஆரமும் எடுப்பாகக் காட்டப்பட்டுள்ளது.
வலக்கரம் மலரைக் கையில் ஏந்திய நிலையில்
உள்ளது. கையில் காப்புகளும் காட்சியளிக்கின்றன.
இத்தாய்த் தெய்வ உருவம் மார்பகப் பகுதிக்குக் கீழ் உடைந்த நிலையில் கிடைத்துள்ளது.
யாகைள் அணிவகுத்துச் செல்லும் சுடுமண் தாங்கி
யானைகள் வாரிசையாக அணிவகுத்துச் செல்லும் காட்சி அழகாகக் காட்டப்பட்டுள்ளது.
அவற்றுள் இரண்டு யானைகள் நல்ல நிலையில் உள்ளன.
தொடர்ந்து மூன்றாவது யானை ஒன்றும் வரிசையில் வரும் காட்சி காட்டப்பட்டுள்ளது.
யானைகளுக்கு மேலே பூமாரி பொழிவதைப் போல் காட்சியமைக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பாகும்.
சுடுமண் காளை மாடு
எல்லாவற்றினும் சிறந்ததாக அகழாய்வுக் குழி எண் மூன்றில் 80 செ.மீ ஆழத்தில் கிடைத்த காளைமாட்டின் உருவத்தைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.
35 செ.மீ உயரமும். 25 செ.மீ நீளமும் கொண்ட இக்காளைமாடு நிமிர்ந்த நடையுடன் நின்ற நிலையில் உயரிய திமிலுடன் காடசியளிக்கின்றது.
காளை மாட்டின் கழுத்தில் மணி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்தக் காளையின் வலப்பக்க குறுங்கொம்பு மட்டும் பிறை நிலவு போல் வளைந்து காணப்படுகின்றது.
ஆனால் அதன் இடப்பக்கத்தில் உள்ள கொம்பும் இரு காதுகளும் உடைந்து காணப்படுகின்றன.
கண்கள் நன்கு விழித்த நிலையில் காட்டப்பட்டுள்ளது.
காளையின் கழுத்துத் தோல்
( கங்கை தோல் என்று கிராம மக்கள் இதனை குறிப்பிடுவர்) அழகாக வளைந்து உள்ளவாறு காட்சியளிக்கின்றது.
இந்தக் காளையின் வயிறு நன்றாக உருண்டு திரண்டு பானைபோல் உள்ளது.
காளைமாட்டுச் சுடுமண் உருவங்கள் ஏற்கனவே அரப்பா, பிக்லிஹால் ஆதிச்சனூர் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.
பண்டைய மக்கள் தங்கள் வாழ்வின் ஆதாரங்களாகவும் செல்வமாகவும், தங்கள் பயிர்த்தொழிலில் உற்ற நனண்பனகாவும் பயன்படுத்தியதோடு மட்டும் அல்லாமல் அவைகளைத் தெய்வங்களாகவும் போற்றி வழிபட்டனர் என்பதை இக்காளை மாட்டு உருவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
குறிப்பாகக் காளை மாட்டின் கால் பகுதியானது பெருங்கற்காலத்தைத் சார்ந்த ஈமப் பேழையில் வாரிசையாக உள்ள கால்களின் அமைப்பில் உள்ளன.
இக்காளை மாட்டின் பின்புறத்தில் சிறிய துளை ஒன்று காணப்படுகிறது.
இந்த துளை எதற்கான இடப்பட்டிருக்கும் என்பதில் சிறிது ஐயப்பாடு எழுகிறது.
இருப்பினும், பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் எலும்பு மற்றும் சாம்பலை ஈமப் பேழையிலோ அல்லது முதுமக்கள் தாழியிலோ வைத்துள்மைக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் கிடைக்கும்
தாழிகள் சாட்சிகளாக அமைகின்றன.
இக்
காளைமாட்டு ஈமப் பேழையில் சாம்பலை வைத்து அடக்கம் செய்திருக்கலாம்.
அல்லது இரண்டாம் நிலை அடக்கம் செய்யும் (
Secondary
burial) பேழையாகவும் பயன்படத்தப்பட்டிருக்கலாம் . தமிழகத்தில் ஈமப்பேழைகள் (Sarcophagi)
பலவித வடிவங்களில் குறிப்பாக பல்வேறு வடிவினில் கிடைக்கின்றன.
ஆண்டிப்பட்டியில் காளை மாட்டுருவை ஈமப்பேழையாகப்
பயன்படுத்தி இருக்கலாம்.
தமிழகத்தில் காளை மாட்டு வடிவினில் ஈமப்பேழை கிடைப்பது இதுவே முதன் முறையாகும். ஆனால் , இங்குக் கிடைத்த காளைமாட்டின் உள்ளே எலும்புகளோ
(Bones) அல்லது சாம்பலோ (Ashes) கிடைக்கவில்லை என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
அகழாய்வு கூறும்செய்திகள்
ஆண்டிப்பட்டி அகழாய்வில் மொத்தம் 655 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இவ்வகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களை அடிப்படைச் சான்றகளாகக் கொண்ட இப்பகுதியில் மக்கள் பெருங்கற்காலம கி.பி. 12ஆம் நூற்றாண்டுவரை வாழ்ந்திருக்கலாம் என அறிய முடிகிறது.
இத்தொல்பொருட்களைக் கொண்டு இப்பகுதி மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை ஓரளவிற்கு அறிய முடிகிறது.
உறைவிடம்
அகழாய்வில் மக்கள் வாழ்ந்த வீடுகளின் கட்டடப் பகுதிகளோ, மரத்தூண்கள் நிறுத்தியமைகளைத் தோண்டு குழிகளோ (
Post Holes) கிடைக்கவில்லை. எனினும் , அகழாய்வுக் குழி எண் - 3 இல் 14 செ.மீ ஆழத்தில் பள்ள வரி கூரை ஓடுகள் (Grooved Tiles) கிடைத்துள்ளன. இவை அவர்கள் வீடுகட்டி வாழ்ந்தமைக்கான சான்றுகளாக அமைகின்றன.
பொழுது போக்கு
ஆண்டிப்பட்டி அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டச் சில்லுகளும் வட்டமான உடைந்த சக்கரத்தின் பகுதிகளும் சதுரங்கக் காய்களும் கிடைத்துள்ளன.
இவை இம்மக்கள், உழைப்பிற்குப் பின்
ஓய்வில்
பொழுதினை இனிமையாகக் கழித்தமையையும் அவ்வப்போது பல்வகை விளையாட்டுகளில் ஈடுபட்டதையும் உணர்த்துகின்றன. அம்பு முனைகளும் , கத்திகளின் உடைந்த பகுதிகளும் கிடைப்பதிலிருந்து இம்மக்கள் வில் , வேல் போன்றவற்றைப் பயன்படுத்தி வேட்டையில் தேர்ச்சி பெற்றிருந்தமையை அறிய முடிகின்றது.
பொருளாதார நிலை
தங்கத் துண்டுகளும், தங்க மோதிரம், தங்க இலை போன்ற தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களும், மணிகளும் கிடைத்திருப்பதிலிருந்து இப்பகுதி மக்களில் சிலரேனும் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்தமையை நன்கு அறிய முடிகிறது.
அவர்கள் வட இந்திய ( ராஜஸ்தான் மற்றும் குஜராத் ) பகுதிகளுடனும் , ரோமானிய மக்களுடனும் வியாபாரத் தொடர்புகள் கொண்டிருந்தனர் என்பதை இங்குக் கிடைத்த சூதுபவள மணிகள் ( Cornation Beeds) மூலம் அறிய முடிகிறது.
தொழிற் கூடங்கள்
பல தொழிற்கூடங்கள் இப்பகுதியில் இருந்தமைக்கு அகழாய்வில் கிடைக்கும் தொல் பொருட்களே சான்றாக அமைகின்றன.
இந்த அகழ்வில் 193 சுடுமண் பொருட்கள் கிடைத்திருப்பதைக் கொண்டு இங்கு வாழ்ந்த மக்கள் சுடுமண் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று விளங்கியுள்ளார்கள் என அறிய முடிகிறது.
சூது பவளம், பச்சை , நீலநிறம், மஞ்சள், பெரில் , பளிங்கு, சங்கு, சுடுமண், அரக்கு போன்றவற்றால் செய்யப்பட்ட அழகிய மணிகள் இங்கு 194 கிடைத்துள்ளன.
இதன்மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் சுடுமண் கலையில் மிகவும்
தேர்ச்சி பெற்று விளங்கியுள்ளார்கள் என்றும் இம்மணிகளைப் பிற பகுதிகளுக்கும் வணிகர்கள் மூலம் விற்றார்கள் என்றும் தெரிகிறது.
சமய நம்பிக்கைகள்.
ஆண்டிப்பட்டி அகழாய்வின் மூலம் இங்கு வாழ்ந்த மக்களின் சமய நம்பிக்கையை பெரிய அளவில் அறிய இயலாவிடினும் ஓரளவு யூகிக்க முடிகிறது.
அகழாய்வில் சமய நம்பிக்கையை அறிய உதவும் தொல்பொருட்களாகச் சுடுமண்ணாலான இரண்டு தாய்த் தெய்வ
உருவங்கள் இம்மக்களின் தாய்த் தெய்வ வழிபாட்டை நினைவுறுத்துகின்றன.
சுடுமண் காளை மாட்டுருவம், வயிற்றுப் பகுதியில் இற்நத மனிதனின் சாம்பலை வைத்து அடக்கம் செய்ய பயன்படும் ஈமப் பேழையாகவும் இருக்கலாம்.
எனவே, இப்பகுதி மக்கள் இறந்த பின்னும் வாழ்க்கை உண்டு என எண்ணியிருந்தனர் என அறிய முடிகிறது.
3. படவேடு
திருவண்ணாமலை மாவட்டம் போளுர் வட்டத்தில் சந்தவாசல் என்னும் ஊருக்கு வடக்கில் படவேடு அமைந்துள்ளது. மலைகள் அரண்களாக சூழ்ந்து அமையப் பெற்ற இவ்வூர் சம்புவராயார்களின் தலைநகராமாக விளங்கியது. இவ்வூரின் அருகில் கமண்டல நாகநதி பாய்கிறது.
வரலாற்றுச் சிறப்பு
அடர்ந்த காடுகளும் உயர்ந்த மலைகளும் அரணாக அமைந்து இயற்கை எழிலோடு இவ்வூர் காணப்படுகிறது. வடமேற்கே மலையாளக்காடு , செண்பகத்தோப்பு, அத்திமலை ஆகியவையும் தென்கிழக்கே அரணாக, எதிரிகள் எவரும் சுலபத்தில் உட்புகாதவாறு படவேட்டுத் தலைநகரம் மிக வலிமையானதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை மருதரைசர் படைவீடு
எனக் கல்வெட்டுகள் குறிக்கின்றன. இயற்கை அரண்களால் சூழப்பட்ட இந்நகர் சேனைக்கு மிண்டன் வாசல் என்ற கிழக்கு வாயிலையும் தன்மன்
தாங்கயன் வாசல் என்ற வடக்கு வாயிலையும் பெற்றிருந்தது. இங்குள்ள மலையின் மீது கோட்டை
ஒன்று இராஜகம்பீர சம்புவராயர் என்ற மன்னின் 11-ஆவது ஆட்சியாண்டில் கட்டப்பட்டது. இதனை இம்மலை மீது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது. இம்மலைக்கு இராசகம்பீரமலை என்று பெயர். கி.பி. 12- ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 14ம் நூற்றாண்டு வரை சிறப்போடு விளங்கிய இந்நகரம், தற்போது பழைமையான
இடிபாடுகளுடன் ஆங்காங்கு சிறு சிறு கிராமங்களாக காட்சியளிக்கின்றனது. தொடக்கத்தில் மதுரைப் பாண்டியப் பேரரசின் வடபகுதியைப் பாதுகாப்பதற்காகப் படைகள் தங்கியிருந்த இந்த நகரம் படைவீடு என அழைக்கப்பட்டது. நாளடைவில் இப்பெயர் மாற்றம் பெற்றுப் படவேடு என அழைக்கப்பட்டது. இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த படைவீட்டில் தமிழ்நாட்டு அரசு தொல்லியல் துறை மூலம் 1994ஆம் ஆணடில் இயக்குநர் திரு. நடன காசிநாதன் அவர்கள் தலைமையில் திரு. அப்துல் மஜீத், திரு. ச. செல்வராஜ், திரு. கி.சு. சம்பத், திரு. மா. கலைவாணன், திரு. ஸ்ரீகுமார் ஆகியோர் அகழாய்வு மேற்கொண்டனர்.
அகழ்வுக்குழிகள்
வேட்டைகிரி பாளையம் என்னுமிடத்தில் இரண்டு அகழ்வுக் குழிகள் தோண்டப்பட்டன. இவ்விடத்தில் மழையினால் வெளிப்பட்டிருந்த பழங்கால செங்கற்சுவர் பகுதியின் தொடர்ச்சியை அறிவதற்காக இவை தோண்டப்பட்டன. முதல் குழியில் நீளமான சுடுமண் குழாய் ஒன்று வெளிப்பட்டது. இது கண்ணாடிப் பொருட்கள் செய்வதற்கான உலைத் துருத்திக் குழாய் என்று அறியப்பட்டது. முதல் குழிக்கு மேற்குப் புறத்தில் அகழப்பட்ட இரண்டாவது குழியில் கோட்டை மதில் சுவரின் எச்சங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
கோட்டைக்கரை மேட்டில் 12 குழிகள் அகழப்பட்டன. கோட்டை மதில் சுவரின் பகுதிகள், கோட்டைக்குள் இருந்த கட்டடப் பகுதிகள், தண்ணீர்க் கால்வாய்கள் போன்றவை இந்த அகழ்வு குழியின் மூலம் அக்காலத்தில் கட்டப்பட்டிருந்த கோட்டையின் அமைப்பு, அதற்குள் ஏழுப்பப்பட்டிருந்த கட்டங்களின் சிறப்பு, அங்கு வாழ்ந்த மக்களின் உபயோகத்திற்காக ஏற்படுத்தப்பட்ட குடிநீர்க் கால்வாய்களும் கழிவுநீர்க் கால்வாய்களும் அவை அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான பாங்கு ஆகியவற்றைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது.
கட்டடப் பகுதிகள்
கட்டங்களைக் கட்ட செங்கற்களைக்கொண்டு சுவர்கள் எழுப்பிக் கட்டினார்கள். இதற்கு களிமண் இணைப்புப் பொருளாகவும் சுண்ணாம்பு மேற்பூச்சுப் பொருளாகவும் உபயோகப்படுத்தப்பட்டது. இச்சுவற்றின் மீது சாய்வான அமைப்பில் மரச்சட்டங்களை அடித்து, அதன் மேல் தட்டையான கொக்கி வடிவிலான சுடுமண் கூரை ஓடுகளைப் பரப்பி, அதன் மீது சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவையைத் தடிமனாகப் பரப்பல் கூரை அமைத்தார்கள்., செங்கற் துண்டுகளைக்கொண்டு சமதளமாகப் பரப்பி அதன்மீது சுண்ணாம்பும் மணலும் கலந்த கலவையைப் பரப்பி தரைப் பகுதியை ஏற்படுத்தினாh;கள்.
இங்கு இவாக்ள் சின்னக் கோட்டை, பெரிய கோட்டை என்று இரண்டு கோட்டைகள் அமைத்து அவற்றைச் சுற்றிலும் வலிமையான மதல் சுவர்கள் எழுப்பி இருந்தார்கள். இம்மதில் சுவர்களை 1 மீட்டர் 15 செ.மீ அகல அளவில் இருபுறமும் கருகற் பாளங்களைக் கொண்டு சுவர் எழுப்பி அதற்கு இடையில் கெட்டியான் களிமண் மற்றும் செங்கற் துண்டுகளைக் கொட்டி, நன்கு இடித்து மிகவும் வலிமையானதாகக் கட்டி உள்ளனர்.
இம்மதில் சுவர்கள் எவ்வளவு உயரத்திற்கு எழுப்பப்பட்டிருந்தன என்பதை அகழாய்வின் மூலம் அறிய இயலவில்லை.
கால்வாய்கள்
பொதுவாக இக்கோட்டைகளில் அரச குடும்பத்தாரார்களும் அரசு அலுவலர்களும் வாழ்ந்தார்கள். இவர்களின் இடையூறில்லா தண்ணீர் உபயோகங்களுக்கு கட்டங்களுக்கு இடையில் நான்கு வகையான வாய்க்கால்கள் அமைத்திருந்தார்கள். முதல் வகைக் கால்வாய் மிகவும் சாதாரணமாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது கீழே ஒரு செங்கல்லைப் பாவி அதன் இருபுறமும் இரண்டு செங்கற்களைச் செங்குத்தாக நிற்க வைத்து அதன்மீது ஒரு செங்கல்லைக் கொண்டு மூடி
இது போன்று வரிசையாக அமைத்துக் கால்வாய் அமைத்திருந்தனர். அகழ்வுக்குழியில் கட்டப்பட்டிருந்த ஒரு தொட்டியிலிருந்து இக்கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. உபயோகப்படுத்தப்பட்ட பயன் இல்லாத தண்ணீர்
வெளியேறுவதற்காக இக்கால்வாய் நல்ல முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது வகைக் கால்வாய் கருங்கற்களைக் கொண்டு
அமைக்கப்பட்டிருந்தது. இக்கால்வாய கழிவு நீரை வெளியேற்றுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது வகைக் கால்வாய் மிகவும் சிறப்பானதாகும். இது கருங்கற்பலகைகளைக் கொண்டு மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டு அதற்குள் காற்றுப் புகாவண்ணம் களிமண் கொண்டு கெட்டியாகப் பூசப்பட்டிருந்தது. தண்ணீர் தடையில்லாமல் செல்வதற்கேற்றவாறு காற்றுக் குழாய்களும் ஆங்காங்கு உள்ளன.
இக்குழாய்கள் சுத்தமான
குடிநீரைக் கொண்டு வருவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்குடிநீர் குளிர்ச்சியாக இருப்பதற்கேற்றவாறு இக்கால்வாயின் அடிப்புறமும், பக்கவாட்டில் இருபுறமும், ஆற்றுமணல் கொட்டப்பட்டிருந்தது.
நான்காவது வகை வட்ட வடிவ சுடுமண் குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்டதாகும். இச்சுடுமண் குழாய்கள் ஒவ்வொன்றும் 20 செ.மீ நீளத்தில் முன்புறம் 15 செ.மீ விட்டமும் கடைசிப்பகுதி 11 செ.மீ விட்டமும் கொண்ட வட்ட வடிவமானவையாகும். இச்சுடுமண் குழாய்களை ஒன்றொடொன்று பொருத்தி இணைத்து நீர் கசியா வண்ணம், சுண்ணாம்பு கொண்டு பூசியுள்ளனா;. இவை கட்டத்திற்குள் உள்ள அறைகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் தமக்குத் தேவையான தண்ணீரை அருகில் பாயும் கமண்டல நாகநதி என்னும் ஆற்றிலிருந்தும் கோட்டைக்குள்ளேயே உறை கிணறுகளை ஏற்படுத்தி அவற்றின் மூலமாகவும் எடுத்துக் கொண்டனர்
அகழ்வுக்குழி -2
மற்றும் 4-இல் சுடுமண் உறைகிணறுகள் அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்டன.
காலப்பகுப்பு
முதற்காலம் கி.பி.
13-14 ஆம் நூற்றாண்டு
வரை
மட்கலன்கள் 1. சிவப்பு வண்ணக்கலயங்கள், 2, கெண்டிகள், ஜாடிகள், கிண்ணங்கள்,
பெரிய குடுவைகள், கருப்பு வண்ணத் தட்டுகள்.
தொல்பொருட்கள் – 1. அலங்காரம் செய்யப்பட்ட சுடுமண் விளக்குகள், 2, அலங்காரச்
சுடுமண் தூபக் கலசங்கள், தந்த தாயம், மாவுக்கல் தாயம், கருப்புக் கண்ணாடி வளையல்கள்,
இரும்பு ஆணிகள், சுடுமண் உலைத்துருத்திக் குழாய்கள், சுடுமண் மூசைகள்,
இரண்டாம் காலம் கி.பி.
15-17ஆம் நூற்றாண்டு
வரை
மட்கலன்கள் – சிவப்பு வண்ணக் கலயங்கள், குடுவைகள், தட்டுகள், கிண்ணங்கள்,
மூடிகள், சேமிப்பு பெரிய ஜாடிகள், பணியாரச் சட்டி.
தொல்பொருட்கள் – சுடுமண் சாதாரண விளக்குகள், சுடுமண் காசு வார்ப்புகள்,
மஞ்சள், சிவப்பு, வெள்ளை வண்ணக் கண்ணாடி வளையல் துண்டுகள், செப்புக் குழாய், இரும்பு
ஆணிகள்.
காசுகள்
படவேடு அகழாய்வில் மொத்தம் ஐந்து செப்புக் காசுகள் கிடைத்தன.
அவற்றின் விவரம் கீழ்வருமாறு. 1.முதலாம் இராசராசன் காசு,2. விஜயநகர மன்னன் இரண்டாம் புக்கராயனின் இரண்டு காசுகள் 3. விஜயநகர மன்னன் முதலாம் தேவராயன் காசு 4.டெல்லி சுல்தானின் பிரதிநிதி ஜலாலுதின் அசன் என்பவரின் காசு ( கி.பி. 14ம் நூற்றாண்டு) .
சம்புவராயர்களின் தலைநைகராமாக விளங்கிய படைவீட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் இடை வரலாற்றுக்கால நகரக் கட்டடக் கலையைப் பற்றி அறிந்து கொள்ள சிறப்பான சான்றுகளை அள்ளித் தருகின்றது.
மேற்காணும் அகழாய்வுகள் யாவும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருங்கற்காலத்தோடு இணைந்த சங்க காலத்திலிருந்து கி.பி. 14ஆம் நூற்றாண்டின் சம்புவராயர் காலம் வரை வாழ்ந்த மக்களின் சமூக, பொருளாதார, சமய மற்றும் கலை நிலைகள் குறித்து அறிந்து கொள்ள அரிய சான்றுகளைத் தருகின்றன எனின். அது மிகையல்ல.
Comments
Post a Comment